இரண்டு LPL அணிகளின் உரிமையாளர்கள் விலகல்

இரண்டு LPL அணிகளின் உரிமையாளர்கள் விலகல்

லங்கா பிரீமியர் லீக் T20 (LPL) கிரிக்கெட் தொடரில் இடம்பெற்றுள்ள கொழும்பு கிங்ஸ் மற்றும் தம்புள்ள வைகிங் ஆகிய அணிகளின் உரிமையாளர்கள் அணிகளுக்கான தமது உரிமத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த இரண்டு அணிகளினதும் உரிமைத்துவம் இடைநிறுத்தப்படுவதாக போட்டிகளை நடத்தும் IPG நிறுவனம் அறிவித்துள்ளது.

இரண்டாவது தடவையாக இவ்வருடம் நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் T20 கிரிக்கெட் தொடர் ஜுலை மாதம் 29ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், இம்முறை லங்கா பீரிமியர் லீக்கில் பங்குபற்றவுள்ள ஐந்து அணிகளினதும் உள்ளூர் நட்சத்திர வீரர்களின் பெயர் விபரங்கள் இலங்கை கிரிக்கெட் சபையினால் அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதேபோல, வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவுகளும் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இதனிடையே, கடந்த வருடத்தைப் போல இம்முறை லங்கா பிரீமியர் லீக்கில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் மற்றும் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணிகள் அதே உரிமையாளர்களினால் தக்கவைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

எனினும், ஏனைய மூன்று அணிகளின் உரிமையாளர்கள் தொடர்பில் எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், லங்கா பிரீமியர் லீக் தொடரை 2024 வரை நடத்துவதற்கான உரிமையை டுபாயைத் தலைமையிடமாகக் கொண்ட இனோவேடிவ் ப்ரொடக்ஷன் குரூப் நிறுவனம் (IPG) பெற்றுக்கொண்டுள்ளது.

இதில் கடந்த வருடம் நடைபெற்ற அங்குரார்ப்பண லங்கா பிரீமியிர் லீக் தொடரில் அரையிறுதி வரை வந்த தம்புள்ள வைகிங் அணியின் உரிமையை பொலிவுட் நடிகரும், பிரபல தொழிலதிபருமான சச்சின் ஜோஷி பெற்றுக்கொண்டார்.

அதேபோல, மற்றுமொரு அரையிறுதி அணிகளில் ஒன்றான கொழும்பு கிங்ஸ் அணியின் உரிமையை முராத் முஸ்தாப உள்ளிட்ட பாஸா குழுமம் (FAZA) பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நிதி நெருக்கடி உள்ளிட்ட சில காரணங்களால் இவ்வருடம் நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக்கில் தொடரிலிருந்து கொழும்பு கிங்ஸ் மற்றும் தம்புள்ள வைகிங் ஆகிய அணிகளின் உரிமைத்துவம் இடைநிறுத்தப்படுவதாக IPG நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, குறித்த இரண்டு அணிகளையும் வாங்குவதற்கு பல முன்னணி நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும், அதற்கான இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருவதாகவும் IPG தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் லங்கா பிரீமியர் லீக் தொடரின் இயக்குனர் ரவீன் விக்ரமரட்ன கருத்து தெரிவிக்கையில்,

”இம்முறை லங்கா பிரீமியர் லீக்கில் கொழும்பு கிங்ஸ் மற்றும் தம்புள்ள வைகிங் ஆகிய அணிகளை வாங்குவதற்கு உரிமையாளர்கள் முன்வந்துள்ளார்கள். அதன் விபரங்களை நாங்கள் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

ஐ.சி.சியின் ஊழல் தடுப்புப் பிரிவின் அறிக்கை கிடைக்கும் வரை எம்மால் அதுதொடர்பில் எந்தவொரு தகவல்களையும் வெளியிட முடியாது.

அதேபோல, இவ்வாறு உரிமையாளர்கள் விலகியது இம்முறை போட்டிகளுக்கு எந்தவொரு பாதிப்பினையும் ஏற்படுத்தாது.

இதில் மற்றைய மூன்று அணிகளின் உரிமையாளர்கள் தொடர்ந்து அந்நந்த அணிகளை தக்கவைத்துக்கொள்ள முன்வந்துள்ளனர்.

எதுஎவ்வாறாயினும், ஆறு அணிகளை களமிறக்க திட்டமிடப்பட்ட போதிலும், இவ்வருட போட்டிகளில் ஐந்து அணிகள் மாத்திரம் தான் விளையாடும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணிக்கெதிரான தொடரை தவறவிடும் ஜோஸ் பட்லர்

இலங்கை அணிக்கெதிரான தொடரை தவறவிடும் ஜோஸ் பட்லர்

இலங்கை அணியுடன் நடைபெறவுள்ள எஞ்சிய போட்டிகளில் இருந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் ஜோஸ் பட்லர் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியுடன் கடந்த 23ஆம் திகதி நடைபெற்ற முதலாவது T20 போட்டியில் அரைச்சதம் கடந்து 68 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஜோஸ் பட்லர் அந்த அணியின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக இருந்தார்.

எனினும், குறித்த போட்டியின் போது அவரது வலதுகணுக் காலில் சிறிய காயமொன்று ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அவருக்கு இரண்டாவது போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், அவருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட MRI பரிசோதனையல் காயத்தின் தன்மை அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்காரணமாக அவரை இங்கிலாந்து குழாத்திலிருந்து நீக்குவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, அவர் மீண்டும் வீடு திரும்பி காயத்துக்கான மேலதிக சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜோஸ் பட்லருக்குப் பதிலாக டாவிட் மலான் இங்கிலாந்து ஒருநாள் அணியுடன் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறும் அவிஷ்க பெர்னாண்டோ

இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறும் அவிஷ்க பெர்னாண்டோ

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை உபாதை காரணமாக, இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ தவறவிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியானது, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20I தொடர்களில் விளையாடி வருகின்றது. இதில், மூன்று T20I போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், தொடரை 3-0 என இலங்கை அணி இழந்துள்ளது.

குறித்த இந்த தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் நடைபெறவுள்ள நிலையில், அவிஷ்க பெர்னாண்டோ உபாதைக்குள்ளாகியுள்ளார் என இலங்கை கிரிக்கெட் சபையின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும், அவிஷ்க பெர்னாண்டோவுக்கு ஏற்பட்டுள்ள உபாதை தொடர்பிலான முழுமையான தகவலை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிடவில்லை. எனினும், குறித்த உபாதை காரணமாக ஐசிசி சுப்பர் லீக் தொடருக்கான மூன்று ஒருநாள் போட்டிகளையும் அவிஷ்க பெர்னாண்டோ தவறவிடவுள்ளார்.

அவிஷ்க பெர்னாண்டோ உபாதை காரணமாக தொடரை தவறவிடவுள்ளதுடன், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் ஜோஸ் பட்லர் உபாதை காரணமாக ஒருநாள் போட்டிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழல்பந்து ஆலோசகராக ஹேரத்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழல்பந்து ஆலோசகராக ஹேரத்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் நட்சத்திரமான ரங்கன ஹேரத், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழல்பந்து ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவானான ஹேரத், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே அணியுடன் விளையாடவுள்ள கிரிக்கெட் தொடரில் இருந்து, தனது ஆலோசனைப் பணிகளை ஆரம்பிக்கவிருக்கின்றார்.

இதேநேரம், ரங்கன ஹேரத் இந்த ஆண்டு நடைபெறவிருக்கின்ற T20 உலகக் கிண்ணம் வரையில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழல்பந்து ஆலோசகராக செயற்படுவார் என, பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் நிர்வாகங்களுக்குப் பொறுப்பாக இருக்கும் அக்ரம் கான் தெரிவித்திருக்கின்றார்.

கடந்த காலங்களில் இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் வெற்றிகளில் மிக முக்கிய பங்கு வகிக்கின்ற ரங்கன ஹேரத், 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 433 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், ரங்கன ஹேரத்தின் நியமனம் தவிர பங்களாதேஷ் கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவின் அஷ்வெல் பிரின்ஸினை தமது துடுப்பாட்ட ஆலோசகராக நியமனம் செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இணையும் அன்ரே ரசல்

மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இணையும் அன்ரே ரசல்

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள முதல் இரண்டு T20I போட்டிகளுக்கான மேற்கிந்திய தீவுகளின் 13 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தில், மேற்கிந்திய தீவுகளின் முன்னணி சகலதுறை வீரர்களில் ஒருவரான அன்ரே ரசல் இணைக்கப்பட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணி 2012 மற்றும் 2016ம் ஆண்டுகளில் T20I உலகக் கிண்ணத்தை வெற்றிக்கொண்ட குழாத்தில் விளையாடியிருந்தார்.

இந்தநிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு பின்னர் அன்ரே ரசல் மீண்டும், மேற்கிந்திய தீவுகள் குழாத்துக்குள், இணைக்கப்பட்டுள்ளார். அத்துடன், கொவிட்-19 தொற்றுக்கு பின்னர் முதன்முறையாக மைதானத்துக்கு ரசிகர்களை அழைப்பதற்கான நடவடிக்கையையும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை மேற்கொண்டுள்ளது.

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான T20I குழாத்துக்கு அன்ரே ரசல் இணைக்கப்பட்டமை தொடர்பில், கருத்து வெளியிட்ட மேற்கிந்திய தீவுகளின் தேர்வுக்குழு தலைவர் ரொஜர் ஆர்பர் கருத்து வெளியிடுகையில்,

“அன்ரே ரசல் அணிக்கு மிக முக்கிய வீரர். துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என அணிக்கு தேவையான வீரர். எனவே, இரண்டு துறைகளுக்கும் பலமான விடயம். இந்த ஆண்டு ஆரம்பத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிராக வெளிப்படுத்திய திறமையை வெளிப்படுத்த எதிர்பார்க்கிறோம். அத்துடன், இந்த ஆண்டு நடைபெறவுள்ள T20I உலகக் கிண்ணத்துக்கு பலமான குழாமாக களமிறங்க வேண்டும் என்பதுதான் எமது நோக்கம்” என்றார்.

அன்ரே ரசல், பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் இந்த ஆண்டு அறிமகமாகியிருந்தாலும், தன்னுடைய முதல் போட்டியில் பந்து தலையில் தாக்கியதால், சிகிச்சைகளுக்கு முகங்கொடுத்தார். இதனைத்தொடர்ந்து அவர் தொடரிலிருந்து விலகியிருந்தார்.

தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20I போட்டிகள், இன்று (27) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குழாம்

கீரன் பொல்லாரட் (தலைவர்), நிக்கோலஸ் பூரன், பெபியன் எலன், டுவைன் பிராவோ, பீடல் எட்வர்ட்ஸ், என்ரே பிளட்சர், கிரிஸ் கெயில், ஜேசன் ஹோல்டர், எவின் லிவிஸ், ஒபட் மெகோய், அன்ரே ரசல், லிண்ட்ல் சிம்மன்ஸ், கெவின் சின்கிளையர்

2021 யூரோ கோப்பை கால்பந்து – டென்மார்க், இத்தாலி அணிகள் காலிறுதிக்கு முன்னேற்றம்

யூரோ கோப்பை கால்பந்து – டென்மார்க், இத்தாலி அணிகள் காலிறுதிக்கு முன்னேற்றம்

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் ஆம்ஸ்டர்டாமில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் டென்மார்க் அணி, வேல்சை எதிர்கொண்டது.

ஆட்டத்தின் 27-வது நிமிடத்தில் சக வீரர் டாம்ஸ் கார்டு தட்டிக்கொடுத்த பந்தை டென்மார்க்கின் கேஸ்பர் டோல்பெர்க் கோல் அடித்து அதிர்ச்சி அளித்தார்.
பிற்பாதியில் 48-வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் டோல்பெர்க் மீண்டும் ஒரு கோல் அடித்தார். கடைசி கட்டத்தில் டென்மார்க்கின் ஜோகிம் மாலே 88-வது நிமிடத்திலும், பிராத்வெயிட் 90-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

இறுதியில், டென்மார்க் 4-0 என்ற கோல் கணக்கில் வேல்சை பந்தாடி காலிறுதிக்குள் நுழைந்தது.

இன்று அதிகாலையில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி, ஆஸ்திரியா அணிகள் மோதின. வழக்கமான நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

ஆட்டத்தின் 95வது நிமிடம் மற்றும் 105-வது நிமிடத்தில் இத்தாலி அணி தலா ஒரு கோல் அடித்தது. ஆஸ்திரியா அணி 114வது நிமிடத்தில் ஒரு கோல் மட்டுமே அடித்தது.
இறுதியில், இத்தாலி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.



முதல் T20 தென் ஆப்பிரிக்காவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்

முதல் T20 தென் ஆப்பிரிக்காவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்துள்ள தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தொடங்கியது. இந்திய நேரப்படி நள்ளிரவு நடைபெற்ற முதல் 20 ஓவர் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வான் டெர் டுசன்56 ரன்னும், டி காக் 37 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரரான பிளட்சர் 30 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் எவின் லெவிஸ் அதிரடியில் கலக்கினார். அவர் 35 பந்தில் 7 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 71 ரன் எடுத்து அவுட்டானார்.

கெயில் 32 ரன்னும், ரசல் 23 ரன்னும் எடுக்க இறுதியில், 15 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டி20 தொடரில் இலங்கையை 3-0 என ஒயிட் வாஷ் செய்தது இங்கிலாந்து

டி20 தொடரில் இலங்கையை 3-0 என ஒயிட் வாஷ் செய்தது இங்கிலாந்து

இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என தொடரை கைப்பற்றி இருந்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி சவுத்தம்ப்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 180 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் பேர்ஸ்டோவ் மற்றும் மலன் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இருவரும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர்.

மலன் 76 ரன்னும், பேர்ஸ்டோவ் 51 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த வீரர்களை இலங்கை அணியினர் விரைவில் வெளியேற்றினர்.

இலங்கை அணி சார்பில் துஷ்மந்தா சமீரா4 விக்கெட் வீழ்த்தினார்.இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இங்கிலாந்து அணியினரின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை 91 ரன்களில் ஆல் அவுட்டானது.

இங்கிலாந்து சார்பில் டேவிட் வில்லே 3 விக்கெட்டும், சாம் கர்ரன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கையுடனான டி 20 தொடரை 3- 0 என கைப்பற்றி அசத்தியது இங்கிலாந்து. ஆட்ட நாயகன் விருது டேவிட் மலானுக்கும், தொடர் நாயகன் விருது சாம் கர்ரனுக்கும் அளிக்கப்பட்டது.

Design a site like this with WordPress.com
Get started