அநாகரீகமாக நடந்துகொண்ட குசல், நிரோஷன் திக்வெல்ல, கிரிக்கெட் சபை அதிரடித் தீர்மானம்..!
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ள குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோரை உடனடியாக நாட்டிற்கு அழைக்க இலங்கை கிரிக்கெட் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இருபதுக்கு-20 தொடரின் மூன்று போட்டிகளிலும் படுதோல்வி அடைந்துள்ளது.
இந்த விடயம் இலங்கை கிரிகெட் ரசிகர்களை மிகுந்த கவலைக்கும், கோபத்துக்கும் உள்ளாகியுள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களும் தற்போதைய இலங்கை அணியின் நிலைமை குறித்து விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியின் வீரர்களான குசல் மென்டிஸ் மற்றும் திக்வெல்ல அகியோர் இங்கிலாந்தின் டர்ஹம் நகரத்தில் புகைபிடிக்க தயாராவதும் தப்பித்து ஓட முயல்வதும் போன்ற காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
தொடர் தோல்விகள் பற்றி எந்தவித கவலையும் இன்றி இப்படி சுற்றுப் பயணங்களின் போது பொது இடங்களில் அநாகரீகமாக நடந்துகொள்ளும் வீரர்களை அணியிலிருந்து நீக்க வேண்டுமென இரசிகர்கள் தம் எதிர்ப்பை தெரித்து சமூக ஊடகங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்ற நிலையில், குறித்த இரு வீரர்களையும் உடனடியாக நாட்டிற்கு அழைக்க இலங்கை கிரிக்கெட் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
